Monday, March 4, 2013

கண்டம் தாண்டி வந்தவன்....

ஏதோ ஒரு பெரிய சினிமா நடிகரின் புதுப்பட டைட்டில் எல்லாம் இல்லை. தலைப்பில் இருக்கும் கண்டம் தாண்டி வந்தவன் சாட்சாத் நானே தான். நடந்தது என்னவென்றால்...

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் என்னை விட பெரிய பையன்களுடன்  ஐஸ் பாய்ஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். கையில் எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்திருந்த ஒரு பால் பேரிங். சைக்கிள் பேரிங்கை விட சற்றே பெரிய சைசிலிருந்த இரும்பு குண்டு அது. ஐஸ் பாய்ஸில் கண்டுபிடிப்பவனுக்கு தெரியாமல் தனியாக  ஒளிந்து கொள்ளும் போது அதை வாய்க்குள் போட்டு, ஏற்படும் கட முடா சத்தத்தை ரசிப்பதும், பின் அதை வெளியே எடுத்து சட்டையில் துடைத்து மீண்டும் வாய்க்குள் போடுவதுமாக மும்மரமான விளையாட்டு.  அசந்த ஒரு நொடியில் சட்டென்று வாயில் உருண்டு கொண்டிருந்த உருண்டை டபக்கென்று தொண்டைக்குள் போய் விட்டது.

 என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க முழித்தேன். ஒரு நிமிடம் தான். தப தபவென்று வீட்டுக்கு ஓடினேன். அம்மாவிடம் " அம்மா .... இரும்பு குண்டை முழுங்கிட்டேம்மா ...." என்றேன். அவ்ளோதான். குய்யோ முறையோ என்று கூச்சலிடத் துவங்கி விட்டாள். நான் திரு திரு வென முழிப்பதைப் பார்த்து மேலும் கலவரமாகி என்னை தூக்கிக் கொண்டு (ஆமா... அப்பல்லாம் நான் ரொம்ப ஒல்லி) ஓடி ஆட்டோ பிடித்து பக்கத்திலிருந்த க்ளினிக்குக்கு போய்ச் சேர்ந்தோம். டாக்டர் உடனே  எக்ஸ் ரே எடுக்கச் சொல்ல, அதை எடுத்து , அவரிடம் காண்பிக்க, அதை பார்த்து அவர் லேசாகப் புன்னகைத்ததும் தான் அம்மாவுக்கு உயிரே வந்தது.

 " நத்திங் டு வொர்ரி... முழுங்கின குண்டு மூச்சுக் குழாய்ல போய் அடைக்கல. அதுனால பெரிய டேஞ்சர் இப்ப ஒண்ணும் இல்ல. நான் மருந்துலாம் எழுதித் தரேன்.அதை சாப்பிடட்டும்.ஒரு நாலு நாளைக்கு  பையன் மோஷன் போனப்புறம் அதை செக் பண்ணிப் பாருங்க  குண்டு வெளியில வந்துருச்சான்னு. மேக்சிமம் வந்துடும். இல்லன்னா அடுத்த முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று  கூறி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு எதையும்  சாப்பிடவே ரொம்ப பயந்தேன். தண்ணீர் குடித்தால் கூட வயிற்றுக்குள் குண்டு உருள்வதைப் போலொரு பிரமை. கடனைக் கழிக்க  டாய் லெட்டைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நியூஸ் பேப்பரைத்  தான் பயன்படுத்தினேன்.தினமும் நான் கடனை முடித்த பின் அப்பா அதை ஆராய்ச்சி  செய்வார்.குண்டு வெளியில் வந்து விட்டதா என்று பார்க்க. என்னைத் திட்டிக் கொண்டே செய்வார். ஒரு நாள் இரண்டானது , இரண்டு மூன்றானது, மூன்று நான்கானது. எனக்கு  சுத்தமாக நம்பிக்கை அற்று விட்டது. "போச்சுடா.... நம்ம  வயித்தைக் கிழிச்சு தான் குண்டை வெளிய எடுக்க போறாங்க" என்று முடிவு கட்டி விட்டேன்.

அப்போது தான் நான்காம் நாள் இரவு அந்த அற்புதம் நிகழ்ந்தது. மோஷன் போகும் போது குண்டு வெளியில் வந்து விட்டது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, சொல்ல வார்த்தைகள் கிடையாது. இவ்வாறாக நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு மிகப் பெரிய கண்டத்தை தாண்டி வந்தவன்.

பையன் பயந்துட்டான். இனிமே ஒழுங்கா சேட்டை பண்ணாம நல்ல பையனா   இருப்பான் என்று  எண்ணி அப்பா அம்மாவுக்கு நிம்மதி.  நல்ல பையனாகத் தான் இருந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அந்த சம்பவம் நடக்கும் வரை.....

கண்டம் தாண்டி வந்தவன் 2 - தொடரும்......

No comments:

Post a Comment