Wednesday, February 27, 2013

சுஜாதா....

ஒரு ரசிகனாக சுஜாதா மீதான எனது ஆதர்சம் / ஆச்சரியம் / பக்தியைப் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.

ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது அப்பா லைப்ரரியிலிருந்து எடுத்து வந்திருந்த "கொலையுதிர் காலம்" புத்தகத்தின் நைந்து கிழிந்து போன பிரதி தான் சுஜாதாவுடனான ஆரம்ப அறிமுகம். லைப்ரரி போகத் தொடங்கியது அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு தான். சுஜாதாவின் பிற புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிப்பதற்கென்றே .அதற்குப் பிறகு எத்தனையோ   Horror             படங்களைப் பார்த்திருந்தாலும், இன்று வரை, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது திகிலில் உறைந்து வியர்த்து விறுவிறுத்து மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அனுபவம் பெற்றது முதலும் கடைசியுமாக கொலையுதிர் காலத்தில் தான்.
வளர வளர அவரது எழுத்தின் வீச்சும் ஆளுமையும் புலப்பட துவங்கியதும் அவர் மேலிருந்த ஆதர்சமும் அவரது எழுத்துக்களின் மேலிருந்த மயக்கமும் எல்லை மீறிச் சென்று விட்டன.
"ஆ" வாகட்டும், " நில்லுங்கள் ராஜாவே ஆகட்டும், அவரது வேறு எந்த நூலும் ஆகட்டும் , படித்து முடித்தவுடன் அது ஏற்படுத்தும் பிரமிப்பை  வார்த்தைகளில் விவரிப்பது வீண்.
ஒரு மனிதன் தன்னுடைய சொந்தக் கதையை கொஞ்சமே கொஞ்சம் கற்பனை சேர்த்து இத்தனை சுவைபடச் சொல்ல முடியுமா என்றூ வியந்திருக்கிறேன் அவரது ஸ்ரீரங்கத்து கதைகளைப் படித்து விட்டு.
 schizophrenia, hallucination, holograph, extra sensory perception போன்ற சுட்டுப் போட்டாலும் விளங்காத கடினமான அறிவியல் சங்கதிகளை கொஞ்சம் கூட சலிக்காமல் என் போன்ற பாமரன்களுக்கும் புரியும் வகையில் கதையோடு கலந்து தரும் வித்தை என் தலைவனுக்கு மட்டுமே உண்டு.
எழுத்தார்வத்தை உண்டு பண்ணியதும் அவர்தான். இலக்கணப் பிழை எழுத்துப் பிழை இல்லாமல் ஓரளவு தமிழ் எழுதக் காரணமும் அவரே தான்.
ரத்தம் ஒரே நிறம் படித்த பின் தான் பள்ளியில் படிக்கும் போது  வரலாற்றுப் பாடத்தில் படிக்காமல் விட்ட சிப்பாய்க் கலகம் பற்றி சிறிதளவேனும் தெரிந்து கொண்டேன்.
நான் சுஜாதாவின் ரசிகன் என்று பேச்சுவாக்கில் யாரிடமேனும் சொல்ல நேர்ந்தால், என் அம்மா என் புத்தக அலமாரியைக் காண்பித்து பெருமையோடு தான் இன்றும் சொல்கிறாள்.

 சில காலமாக பிரபலங்கள் பலரின் இறப்பை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்துப் பழகியவன் நிஜமாகவே மனம் வருந்தியது இரண்டே பேரின் மறைவுக்கு மட்டும் தான். ஒருவர் நாகேஷ். இன்னொருவர் சுஜாதா... 


இதை எழுதும் போதே  இன்னொரு முறை "அனிதா இளம் மனைவி" படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.படிப்பேன்.

எல்லாப் புகழும் சுஜாதாவுக்கே.


 

No comments:

Post a Comment