Thursday, February 28, 2013

பொம்மைப் படங்கள் 2

சில நாட்களுக்கு முன் எனக்கு சமீப காலமாக அனிமேஷன் படங்கள் ஏன் பிடிக்கிறது என்பது பற்றி  எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக , அது தொடர்பாக இன்று ஒரு சம்பவம்.

காலையில் எழுந்ததும் வழக்கமாகச் செல்கிற இடத்துக்குச் செல்லும் போது , சில நாட்களாகக் கண்ணில் படாமல் இருந்த பங்காளிகள் ( கரப்பான் பூச்சிகள் ) நான்கைந்து பேர் சர  சர வென்று எந்த ஓட்டையிலிருந்தோ வெளி வருவது கண்ணில் பட்டது.அந்தப் பக்கமாக வந்த என்  அப்பாவும் அதைப் பார்த்து விட்டார். கரப்பான் கொல்லி ஸ்பிரேவை எடுத்து வந்து கையில் கொடுத்து "ஸ்பிரே அடிச்சிட்டு அதுங்கள வெளிய எடுத்துப் போட்டுடு" என்று கூறி விட்டு போய் விட்டார்.

பங்காளிகள் இருந்த பக்கம் திரும்பினேன். மிக அதிகமாக அனிமேஷன் படங்கள் பார்த்ததன் விளைவாகவோ என்னவோ திடீரென்று அவைகளெல்லாம் என்னைப் பார்த்துக் கண்களில் மரண  பயத்துடன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி   வைத்துக் கொண்டு "Please.... we beg you... please don't kill us... have some mercy..... (கவனம் - தமிழில் அல்ல. ஆங்கிலத்தில்) என்று கெஞ்சுவது போல் தோன்றியது. என்னவோ  போல் இருந்தது. ஸ்பிரே அடிக்க மனது வரவில்லை. அப்பாவைக் கூப்பிட்டு அவர் கையிலேயே அதைக் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு  அகன்று விட்டேன்.சிறிது நேரத்திற்கு ஸ்பிரே அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

இது நல்லதுக்கா கெட்டதுக்கா ? அனிமேஷன் படங்களுக்கு தான் வெளிச்சம்.

Wednesday, February 27, 2013

சுஜாதா....

ஒரு ரசிகனாக சுஜாதா மீதான எனது ஆதர்சம் / ஆச்சரியம் / பக்தியைப் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.

ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது அப்பா லைப்ரரியிலிருந்து எடுத்து வந்திருந்த "கொலையுதிர் காலம்" புத்தகத்தின் நைந்து கிழிந்து போன பிரதி தான் சுஜாதாவுடனான ஆரம்ப அறிமுகம். லைப்ரரி போகத் தொடங்கியது அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு தான். சுஜாதாவின் பிற புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிப்பதற்கென்றே .அதற்குப் பிறகு எத்தனையோ   Horror             படங்களைப் பார்த்திருந்தாலும், இன்று வரை, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது திகிலில் உறைந்து வியர்த்து விறுவிறுத்து மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அனுபவம் பெற்றது முதலும் கடைசியுமாக கொலையுதிர் காலத்தில் தான்.
வளர வளர அவரது எழுத்தின் வீச்சும் ஆளுமையும் புலப்பட துவங்கியதும் அவர் மேலிருந்த ஆதர்சமும் அவரது எழுத்துக்களின் மேலிருந்த மயக்கமும் எல்லை மீறிச் சென்று விட்டன.
"ஆ" வாகட்டும், " நில்லுங்கள் ராஜாவே ஆகட்டும், அவரது வேறு எந்த நூலும் ஆகட்டும் , படித்து முடித்தவுடன் அது ஏற்படுத்தும் பிரமிப்பை  வார்த்தைகளில் விவரிப்பது வீண்.
ஒரு மனிதன் தன்னுடைய சொந்தக் கதையை கொஞ்சமே கொஞ்சம் கற்பனை சேர்த்து இத்தனை சுவைபடச் சொல்ல முடியுமா என்றூ வியந்திருக்கிறேன் அவரது ஸ்ரீரங்கத்து கதைகளைப் படித்து விட்டு.
 schizophrenia, hallucination, holograph, extra sensory perception போன்ற சுட்டுப் போட்டாலும் விளங்காத கடினமான அறிவியல் சங்கதிகளை கொஞ்சம் கூட சலிக்காமல் என் போன்ற பாமரன்களுக்கும் புரியும் வகையில் கதையோடு கலந்து தரும் வித்தை என் தலைவனுக்கு மட்டுமே உண்டு.
எழுத்தார்வத்தை உண்டு பண்ணியதும் அவர்தான். இலக்கணப் பிழை எழுத்துப் பிழை இல்லாமல் ஓரளவு தமிழ் எழுதக் காரணமும் அவரே தான்.
ரத்தம் ஒரே நிறம் படித்த பின் தான் பள்ளியில் படிக்கும் போது  வரலாற்றுப் பாடத்தில் படிக்காமல் விட்ட சிப்பாய்க் கலகம் பற்றி சிறிதளவேனும் தெரிந்து கொண்டேன்.
நான் சுஜாதாவின் ரசிகன் என்று பேச்சுவாக்கில் யாரிடமேனும் சொல்ல நேர்ந்தால், என் அம்மா என் புத்தக அலமாரியைக் காண்பித்து பெருமையோடு தான் இன்றும் சொல்கிறாள்.

 சில காலமாக பிரபலங்கள் பலரின் இறப்பை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்துப் பழகியவன் நிஜமாகவே மனம் வருந்தியது இரண்டே பேரின் மறைவுக்கு மட்டும் தான். ஒருவர் நாகேஷ். இன்னொருவர் சுஜாதா... 


இதை எழுதும் போதே  இன்னொரு முறை "அனிதா இளம் மனைவி" படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.படிப்பேன்.

எல்லாப் புகழும் சுஜாதாவுக்கே.


 

Monday, February 25, 2013

வத்திக்குச்சி...

வத்திக்குச்சி படத்தின் பாடல்களைப் பற்றிய எனது கருத்து மட்டுமே இது. சாதாரணமாகத் திரைப்பாடல்களைக் கேட்கும் போது ஒரு பாமரனின் மனதில் என்ன தோன்றுமோ அதன் எழுத்து வடிவமே எனது இப்பதிவு.

வத்திக்குச்சி :
வாகை சூட வா படத்தில் பிரஷ்ஷான இசையைத்  தர முயன்று அதில் பெரிதளவு வெற்றியும் பெற்ற புது இசையமைப்பாளர் கிப்ரானின் இசையில் பெரிய இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஆல்பம்.

1 . குறு குறு கண்ணாலே :
     முதல் கேட்பிலேயே சட்டென கவனம் ஈர்க்கும் ஹாரிஸ் ஜெயராஜ் வகையறா    பாடல்.பாடலின் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பைக் கடைசி வரை குறையாமல் கொண்டு சென்றதற்கு கிப்ரானுக்கு ஒரு சபாஷ். பல முறை கேட்க வைக்கும் டியூன். கண்டிப்பாக அடுத்த சில நாட்களுக்கு உதடுகள் இப்பாடலை முணுமுணுக்கும் சாத்தியங்கள் உண்டு. ரேட்டிங்  - 6 / 10


2 . அம்மா வேக் மீ அப்  :
    பாடல் வரிகளைக் கேட்கும் போது தமிழ் சினிமாவின் சாம்பிரதாயங்களில் ஒன்றான கதாநாயகியின் அறிமுகப் பாடல் போலத் தோன்றுகிறது.அதிலும் தன்னால் இயன்ற வரை புதிதாக முயற்சித்திருக்கிறார் கிப்ரான்.சாதாரணமாக இம்மாதிரி பாடல்களுக்குப் பயன்படுத்தாத இன்ஸ்ட்ருமெண்ட்களை உபயோகித்ததன் மூலம் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.  ரேட்டிங் - 5 / 10


3 . கண்ண கண்ண :
     ஆல்பத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல்."சர சர சாரக் காத்து" சாயலிலேயே தொடங்கும் பாடல் சட்டென்று தடம் மாறி வேறு வடிவமெடுக்கிறது. பாடகர் சுந்தர் நாரயண ராவ் குரலில் பல வித்தைகள் . வடிவமைத்த கிப்ரானுக்கு அப்ளாஸ். Loop ல் தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறேன்.இன்னும் சில நாட்களுக்கு கண்டிப்பாக அதிகம் கேட்கும் பாடலாக இருக்கும். ரேட்டிங்  - 8 / 10


4 . அறி உன்னை :
கதாநாயகன் எழுச்சி கொண்டு வில்லன்களை துவம்சம் செய்ய புறப்படும் போதோ அதற்குத் திட்டம் தீட்டும் போதோ வரும் பாடல் என்று தோன்றுகிறது . புது முயற்சிகள் செய்ய பெரிய வாய்ப்பில்லாத  வகைப் பாடல். இயன்ற வரை தன்  பாணியில் அதற்கு நியாயம் செய்திருக்கிறார் கிப்ரான். ரேட்டிங் - 5 / 10


5 . வத்திக்குச்சி தீம் :
எல்லா ஆக் ஷன் படங்களிலும் இடம் பெறும் தீம் மியூசிக்கைப் போலவே சம்பிரதாயமான               Template  ஐ பயன்படுத்தியிருக்கிறார் கிப்ரான்.முதலில் மிக மெதுவாகத துவங்கி பிறகு எக்ஸ்பிரஸ் வேகமெடுக்கும் அதே கேட்டுப் பழகிய ஆக்  ஷன்   தீம். பெரிதாக சொல்வதற்கு வேறொன்றுமில்லை. ரேட்டிங் - 4/ 10

பி. கு : வாகை சூட வா ஆல்பம் போலவே இதிலும் எல்லாப் பாடல்களுக்கும் கரோகே டிராக்கை ஆல்பத்தில் இணைத்துள்ளார் இசையமைப்பாளர். வரவேற்கத் தகுந்த முயற்சி. எல்லாப் படங்களிலும் தொடரட்டும்.

Sunday, February 24, 2013

சென்னையின் சாலைகளில் ......

சென்னையின் சாலைகளில் வரைமுறையில்லாத டிராபிக்குக்கு அடுத்தபடியாக நாம் உஷாராக இருக்க வேண்டியது வரைமுறை இல்லாமல் எச்சில் துப்புகிறவர்களிடம் தான்.
சென்னையில் டூ வீலர் ஓட்டுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தனித் திறமை உண்டு. பக்கவாட்டில் ஒரு பைக் கிராஸாகி அடுத்த வண்டி கடக்கும் நொடிப் பொழுதில் வண்டியின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காமல் சைடில் திரும்பி புளிச்சென எச்சில் துப்புவதில் சமர்த்தர்கள் இவர்கள்.
இதற்கும் மேல், டிராபிக்கிலோ சிக்னலிலோ சென்னை மாநகர பேருந்துகளின் அருகில் போய் நிற்க நேர்ந்தால் மிகுந்த உஷாராக இருக்க வேண்டியது அவசியம். எந்த நேரத்திலும் எந்த ஜன்னலில் இருந்தும் எச்சில் தாக்குதல் நடக்கலாம்.
ஒரு முறை நான் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த போது எனக்கு முன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருத்தர் மேலே சொன்ன மாதிரி (எச்சில்) தாக்குதல் நடத்தினார். அதிலிருந்து மயிரிழையில் தப்பினேன். எனக்கு சரியான கோபம். அவரை ஓவர்டேக் பண்ணி அவரை மடக்கி நிறுத்தினேன். கோபம் குறையாமல் " யோவ் உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..... இப்டி எச்ச துப்பறியே பின்னால வரவங்க மேல படும்னு தெரியாதா " என்று கத்தினேன். அந்த ஆள் என்னடாவென்றால் பதிலுக்கு என் மேல் எகிற ஆரம்பித்து விட்டார். நான் எச்சில் துப்புற போது நீ ஏன்யா குறுக்க வந்த? என்கிற ரீதியில் நியாயம் பேச ஆரம்பித்து விட்டார்.
நம் மக்களின்   Road Sense ஐ நினைத்து புல்லரித்த படியே அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

பொம்மைப் படங்கள்.

மேலே தலைப்பில் நான் குறிப்பிட்டது அனிமேஷன் திரைப்படங்களைப் பற்றித் தான். இப்போதெல்லாம் புது தமிழ் படங்களையும், பல ஆங்கிலப் படங்களையும் விட, அனிமேஷன் திரைப்படங்கள் தான் மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. ( நான் நிறையப் படங்கள் பார்ப்பேன். நிறைய என்றால் ரொம்ம்ப நிறைய )
முதல் காரணம், அனிமேஷன் படங்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் குறி வைத்து எடுக்கப் படுவதால், தேவை இல்லாத வன்முறை, சண்டைக் காட்சிகள், குத்துப் பாடல்கள் போன்றவை,அறவே கிடையாது.
மேலும், கதை என்ன என்று மூளையைக் கசக்கி யோசிக்கும் படியோ , ஆழ்ந்த சிந்தனை தேவைப்படும் படியோ படம் எடுப்பது இல்லை. ( நம்ம அறிவு அவ்வளவு தான். என்ன செய்ய ?) எல்லாருக்கும் பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த Fairytale  கதைகளைத் தான் சிற்சில மாற்றங்கள் செய்து படமெடுக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல், எல்லாப் படங்களின் முடிவிலும் ஏதாவது ஒரு  நல்ல கருத்து  சொல்கிறார்கள். (அட நிஜமாவே நல்ல  விஷயம் தாங்க). இந்த மாதிரி காரணங்களால், இப்போதெல்லாம், அனிமேஷன் படங்களையே தேடிப் பிடித்துப் பார்க்கிறேன்.
ஒரே ஒரு வருத்தம். தமிழில் இந்த மாதிரியான முயற்சிகள் அறவே செய்யப்படுவதில்லை. அவற்றுக்குப் போதிய ஊக்கமும் இல்லை, வரவேற்பும் இல்லை. இதனால், மேல் நாட்டு அனிமேஷன் திரைப்படங்களை ரசித்துப் பார்த்தாலும், மனதின் ஓரத்தில், ஒரு வருத்தம் இருக்கத் தான் செய்கிறது.

பி. கு : நான் பார்த்து வெகுவாக ரசித்த சில (அனிமேஷன்) படங்கள் பின் வருமாறு

1 . Ratatouille
2 . Tangled
3 . Wallace & Gromit - The curse of the were rabbit,
4 . A bug's life
5 . Home on the range

நேரமிருப்பவர்கள் தேடிப் பிடித்து பார்க்கவும்.