Thursday, March 28, 2013

பாட்டி சொன்ன கதை..

சிறு வயதில் எனக்கு என் பாட்டி சொன்ன கதை இது. இந்தக் கதை தெரியாதவர்கள் அநேகமாக யாரும் இருக்க முடியாது. இருந்தாலும் இன்னொரு முறை இங்கே...

அத்திரிபாச்சா ....

ஒரு ஊர்ல ஒருத்தன் புதுசா கல்யாணமாகி பொண்டாட்டியோட சந்தோஷமா தனிக்குடித்தனம் இருந்தானாம். கொஞ்ச நாள் கழிச்சு அவனுக்கு அம்மாவப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சாம். பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டுக் கிளம்பினானாம்.

அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அம்மாவுக்கு புள்ளையப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கல ...இது வரைக்கும் செய்யாத பலகாரமா புள்ளைக்கு செஞ்சு கொடுக்கணும்னு முடிவு பண்ணினா. மணக்க மணக்க சுட சுட ஆசை ஆசையா புள்ளைக்கு கொழுக்கட்டை செஞ்சா .... இலையப் போட்டு கொழுக்கட்டைய எடுத்து வெச்சா. ஒண்ணை எடுத்துக் கடிச்சான் புள்ள. அவ்வளவு தான். அந்த சுவையில மொத்தமா மயங்கியே போய்ட்டான். வேக வேகமா சாப்பிட ஆரம்பிச்சவன் எல்லா கொழுக்கட்டையையும் முழுங்கினப்புறம் தான் ஓய்ஞ்சான். கொஞ்சம் மூச்சு விட்டப்புறம் தான் கேட்டான் " இந்தப் பலகாரத்துக்கு என்ன பேரும்மா" ன்னு .. "கொழுக்கட்டை  ராசா" ன்னா  அவ. "வீட்டுக்குப்  போனதும் பொஞ்சாதிய இந்தப் பலகாரத்த செய்யச் சொல்லி நல்லா வயிறு முட்ட அமுக்கணும்னு நெனச்சிக்கிட்டே கெளம்பினான். பலகரத்தோட பேர் மறந்துடக் கூடாதுன்னு நடக்கும் போது " கொழுக்கட்டை கொழுக்கட்டை கொழுக்கட்டை"ன்னு சொல்லிக்கிட்டே போனான்.
வழியில திடீர்னு ஒரு பெரிய பள்ளம். எகிறிக் குதிச்சுத் தான் தாண்டணும். குதிக்கும் போது  " அத்திரிபாச்சா" அப்படின்னு சொல்லி எகிறிக் குதிச்சான். அவ்வளவு தான். கொழுக்கட்டைங்கிற பேர் மறந்து போச்சு. " அத்திரிபாச்சா அத்திரிபாச்சா அத்திரிபாச்சா"ன்னு சொல்லிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சிட்டான்.
வீடு வந்து சேர்ந்ததும் பொண்டாட்டி கிட்ட " இந்தா...எனக்கு அத்திரிபாச்சா வேணும் பண்ணிக் குடு" ன்னான். ஏற இறங்க அவனைப் பார்த்தவ " நீ என்ன சொல்றியோ ஒண்ணும் புரியல" ன்னா . திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்தான். சூடாகிப் போன பொண்டாட்டி "த.... அதெல்லாம் பண்ணித் தர முடியாது போ" ன்னுட்டா. அவ்வளவு தான். "நான் கேட்டு பண்ண மாட்டேன்னு சொல்றியா...உன்னை என்ன பண்றேன் பாரு" ன்னு கோவமாகி, சாத்தி வெச்சிருந்த உலக்கைய எடுத்து அவளை மொத்து மொத்துன்னு மொத்தினான். குய்யோ முறையோன்னு கத்தினா அவ. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக் கிழவி ஓடி வந்தா. இவன் அடிக்கிறதப் பார்த்துட்டு உலக்கைய புடுங்கி எறிஞ்சா ..."ஏண்டா படுபாவி.. புதுசாக் கட்டிக்கிட்ட பொண்டாட்டிய இப்படிப் போட்டு அடிச்சிருக்கியே...பாரு உடம்பெல்லாம் எப்படி கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போயிருக்கு" ன்னா.
அப்ப தான் அவன் புத்திக்கு உறைச்சது பலகாரத்தோட பேரு. பொண்டாட்டியப் பார்த்து "ங்கே " ன்னு சிரிச்சான். அவ எரிக்கறாப்ல முறைச்சா. தலையைக் குனிஞ்சுக்கிட்டு " இந்தா.. எனக்கு கொழுக்கட்டை செஞ்சு குடு" ன்னான்  .

Tuesday, March 26, 2013

ஆணும் பெண்ணும்....

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் அருகருகே கூட்டம் வழிந்து கொண்டு  நான்கு வரிசைகள். மூன்றாவது வரிசையின் கடைசிக்கு சற்றே முன்னால்  பீச் போகும் டிரெயினுக்கு டிக்கட் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வரிசையை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். வரிசையோடு ஒட்டி டிக்கட் கவுண்டரை நோக்கி நடந்தான். சட்டென்று வரிசையின் குறுக்கே புகுந்து கொள்ள  முயற்சி செய்தான். அங்கே நின்றிருந்தவரின் அதிர்ச்சி ரியாக் ஷனால் ஒரு நொடி தாமதித்தான். ஏற்கனவே கூட்டத்தில் கசகசத்து வியர்த்து வழிந்து கொண்டிருந்த எனக்கு இதைப் பார்த்ததும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ ..." யோவ்... இத்தினி பேரு நிக்கிறாங்கள்ல ...கண்ணு தெரியில ? எங்களையெல்லாம் பார்த்தா எப்படி தெரியுது ...." என்று சத்தம் போட்டு எகிறினேன். இவ்வளவு நேரம் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றிருந்த நம் மக்கள், ஒரு குரல் கேட்டதும் பொங்கி எழுந்து விட்டனர். அவனை சங்கத் தமிழ் வார்த்தைகளால் வசை மாரி  பொழிந்தனர்.தாங்க முடியாமல் அவன்  தலையை தொங்கப்  போட்டுக் கொண்டு வரிசையின்  பின்னால் சென்று அமைதியாக நின்று விட்டான்.
அதே தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன். மற்றொரு நாள். ஆனால் கிழக்குத் தாம்பரம் பக்கம் இருக்கும் டிக்கட் கவுண்டர். இங்கே ஒரே வரிசை தான். அனுமார் வாழ் போல் நீண்டிருந்த வரிசையில் கடைசியில் பொய் நின்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கவுண்டருக்கு முன்னால் நின்றிருந்த ஏழெட்டுப் பேருக்கு அப்புறம் நின்றிருந்தேன். எங்கிருந்தோ வந்தனர் மூன்று பெண்கள். வட நாட்டு (அழகான) இளம் பெண்கள். அட்டகாசமாக சேலை உடுத்தியிருந்தனர். ஏதோ  பங்ஷனுக்கு சென்று விட்டு வந்திருப்பார்கள் போல. அவர்களில்   ஒருத்தி மற்ற இருவரையும் இருக்க சொல்லி விட்டு அவள் மட்டும் வரிசையை நோக்கி வந்தாள். சற்றே  தயங்கியவள் நேராக கவுண்டரை நோக்கி சென்றாள். கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள். " Excuse me....." என்று சத்தம் போட்டுக்  கூப்பிட்டேன். வந்தாள்."Cant you see the queue? Please go and stand at the back" என்றேன்."But its very urgent.. we need to go"      என்றாள்.(வரும் போது மூன்று பெண்களும் சத்தமாக இந்தியில் பேசி சிரித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தேன்). பதிலுக்கு " EVery body has their own emergency. Please follow the queue"என்றேன்.முனகிக் கொண்டெ வரிசையின் கடைசி நோக்கி சென்றாள். இவ்வளவும் நடந்து முடியும் வரை....ஒரு பய வாயத் தொறக்கல. அவளை நான் வரிசையின் கடைசிக்கு அனுப்பியதும் எனக்கு முன்னால்  நின்று கொண்டிருந்த ஒரு 40+  ஆசாமி என்னைப் பார்த்த பார்வையை ( முறைத்தே எரித்து விடுவார் போலிருந்தது)  மறக்கவே முடியாது.
நம் மக்கள் வாழ்க.

Monday, March 4, 2013

கண்டம் தாண்டி வந்தவன்....

ஏதோ ஒரு பெரிய சினிமா நடிகரின் புதுப்பட டைட்டில் எல்லாம் இல்லை. தலைப்பில் இருக்கும் கண்டம் தாண்டி வந்தவன் சாட்சாத் நானே தான். நடந்தது என்னவென்றால்...

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் என்னை விட பெரிய பையன்களுடன்  ஐஸ் பாய்ஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். கையில் எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்திருந்த ஒரு பால் பேரிங். சைக்கிள் பேரிங்கை விட சற்றே பெரிய சைசிலிருந்த இரும்பு குண்டு அது. ஐஸ் பாய்ஸில் கண்டுபிடிப்பவனுக்கு தெரியாமல் தனியாக  ஒளிந்து கொள்ளும் போது அதை வாய்க்குள் போட்டு, ஏற்படும் கட முடா சத்தத்தை ரசிப்பதும், பின் அதை வெளியே எடுத்து சட்டையில் துடைத்து மீண்டும் வாய்க்குள் போடுவதுமாக மும்மரமான விளையாட்டு.  அசந்த ஒரு நொடியில் சட்டென்று வாயில் உருண்டு கொண்டிருந்த உருண்டை டபக்கென்று தொண்டைக்குள் போய் விட்டது.

 என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க முழித்தேன். ஒரு நிமிடம் தான். தப தபவென்று வீட்டுக்கு ஓடினேன். அம்மாவிடம் " அம்மா .... இரும்பு குண்டை முழுங்கிட்டேம்மா ...." என்றேன். அவ்ளோதான். குய்யோ முறையோ என்று கூச்சலிடத் துவங்கி விட்டாள். நான் திரு திரு வென முழிப்பதைப் பார்த்து மேலும் கலவரமாகி என்னை தூக்கிக் கொண்டு (ஆமா... அப்பல்லாம் நான் ரொம்ப ஒல்லி) ஓடி ஆட்டோ பிடித்து பக்கத்திலிருந்த க்ளினிக்குக்கு போய்ச் சேர்ந்தோம். டாக்டர் உடனே  எக்ஸ் ரே எடுக்கச் சொல்ல, அதை எடுத்து , அவரிடம் காண்பிக்க, அதை பார்த்து அவர் லேசாகப் புன்னகைத்ததும் தான் அம்மாவுக்கு உயிரே வந்தது.

 " நத்திங் டு வொர்ரி... முழுங்கின குண்டு மூச்சுக் குழாய்ல போய் அடைக்கல. அதுனால பெரிய டேஞ்சர் இப்ப ஒண்ணும் இல்ல. நான் மருந்துலாம் எழுதித் தரேன்.அதை சாப்பிடட்டும்.ஒரு நாலு நாளைக்கு  பையன் மோஷன் போனப்புறம் அதை செக் பண்ணிப் பாருங்க  குண்டு வெளியில வந்துருச்சான்னு. மேக்சிமம் வந்துடும். இல்லன்னா அடுத்த முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று  கூறி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு எதையும்  சாப்பிடவே ரொம்ப பயந்தேன். தண்ணீர் குடித்தால் கூட வயிற்றுக்குள் குண்டு உருள்வதைப் போலொரு பிரமை. கடனைக் கழிக்க  டாய் லெட்டைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நியூஸ் பேப்பரைத்  தான் பயன்படுத்தினேன்.தினமும் நான் கடனை முடித்த பின் அப்பா அதை ஆராய்ச்சி  செய்வார்.குண்டு வெளியில் வந்து விட்டதா என்று பார்க்க. என்னைத் திட்டிக் கொண்டே செய்வார். ஒரு நாள் இரண்டானது , இரண்டு மூன்றானது, மூன்று நான்கானது. எனக்கு  சுத்தமாக நம்பிக்கை அற்று விட்டது. "போச்சுடா.... நம்ம  வயித்தைக் கிழிச்சு தான் குண்டை வெளிய எடுக்க போறாங்க" என்று முடிவு கட்டி விட்டேன்.

அப்போது தான் நான்காம் நாள் இரவு அந்த அற்புதம் நிகழ்ந்தது. மோஷன் போகும் போது குண்டு வெளியில் வந்து விட்டது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, சொல்ல வார்த்தைகள் கிடையாது. இவ்வாறாக நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு மிகப் பெரிய கண்டத்தை தாண்டி வந்தவன்.

பையன் பயந்துட்டான். இனிமே ஒழுங்கா சேட்டை பண்ணாம நல்ல பையனா   இருப்பான் என்று  எண்ணி அப்பா அம்மாவுக்கு நிம்மதி.  நல்ல பையனாகத் தான் இருந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அந்த சம்பவம் நடக்கும் வரை.....

கண்டம் தாண்டி வந்தவன் 2 - தொடரும்......