Thursday, March 28, 2013

பாட்டி சொன்ன கதை..

சிறு வயதில் எனக்கு என் பாட்டி சொன்ன கதை இது. இந்தக் கதை தெரியாதவர்கள் அநேகமாக யாரும் இருக்க முடியாது. இருந்தாலும் இன்னொரு முறை இங்கே...

அத்திரிபாச்சா ....

ஒரு ஊர்ல ஒருத்தன் புதுசா கல்யாணமாகி பொண்டாட்டியோட சந்தோஷமா தனிக்குடித்தனம் இருந்தானாம். கொஞ்ச நாள் கழிச்சு அவனுக்கு அம்மாவப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சாம். பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டுக் கிளம்பினானாம்.

அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அம்மாவுக்கு புள்ளையப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கல ...இது வரைக்கும் செய்யாத பலகாரமா புள்ளைக்கு செஞ்சு கொடுக்கணும்னு முடிவு பண்ணினா. மணக்க மணக்க சுட சுட ஆசை ஆசையா புள்ளைக்கு கொழுக்கட்டை செஞ்சா .... இலையப் போட்டு கொழுக்கட்டைய எடுத்து வெச்சா. ஒண்ணை எடுத்துக் கடிச்சான் புள்ள. அவ்வளவு தான். அந்த சுவையில மொத்தமா மயங்கியே போய்ட்டான். வேக வேகமா சாப்பிட ஆரம்பிச்சவன் எல்லா கொழுக்கட்டையையும் முழுங்கினப்புறம் தான் ஓய்ஞ்சான். கொஞ்சம் மூச்சு விட்டப்புறம் தான் கேட்டான் " இந்தப் பலகாரத்துக்கு என்ன பேரும்மா" ன்னு .. "கொழுக்கட்டை  ராசா" ன்னா  அவ. "வீட்டுக்குப்  போனதும் பொஞ்சாதிய இந்தப் பலகாரத்த செய்யச் சொல்லி நல்லா வயிறு முட்ட அமுக்கணும்னு நெனச்சிக்கிட்டே கெளம்பினான். பலகரத்தோட பேர் மறந்துடக் கூடாதுன்னு நடக்கும் போது " கொழுக்கட்டை கொழுக்கட்டை கொழுக்கட்டை"ன்னு சொல்லிக்கிட்டே போனான்.
வழியில திடீர்னு ஒரு பெரிய பள்ளம். எகிறிக் குதிச்சுத் தான் தாண்டணும். குதிக்கும் போது  " அத்திரிபாச்சா" அப்படின்னு சொல்லி எகிறிக் குதிச்சான். அவ்வளவு தான். கொழுக்கட்டைங்கிற பேர் மறந்து போச்சு. " அத்திரிபாச்சா அத்திரிபாச்சா அத்திரிபாச்சா"ன்னு சொல்லிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சிட்டான்.
வீடு வந்து சேர்ந்ததும் பொண்டாட்டி கிட்ட " இந்தா...எனக்கு அத்திரிபாச்சா வேணும் பண்ணிக் குடு" ன்னான். ஏற இறங்க அவனைப் பார்த்தவ " நீ என்ன சொல்றியோ ஒண்ணும் புரியல" ன்னா . திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்தான். சூடாகிப் போன பொண்டாட்டி "த.... அதெல்லாம் பண்ணித் தர முடியாது போ" ன்னுட்டா. அவ்வளவு தான். "நான் கேட்டு பண்ண மாட்டேன்னு சொல்றியா...உன்னை என்ன பண்றேன் பாரு" ன்னு கோவமாகி, சாத்தி வெச்சிருந்த உலக்கைய எடுத்து அவளை மொத்து மொத்துன்னு மொத்தினான். குய்யோ முறையோன்னு கத்தினா அவ. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக் கிழவி ஓடி வந்தா. இவன் அடிக்கிறதப் பார்த்துட்டு உலக்கைய புடுங்கி எறிஞ்சா ..."ஏண்டா படுபாவி.. புதுசாக் கட்டிக்கிட்ட பொண்டாட்டிய இப்படிப் போட்டு அடிச்சிருக்கியே...பாரு உடம்பெல்லாம் எப்படி கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போயிருக்கு" ன்னா.
அப்ப தான் அவன் புத்திக்கு உறைச்சது பலகாரத்தோட பேரு. பொண்டாட்டியப் பார்த்து "ங்கே " ன்னு சிரிச்சான். அவ எரிக்கறாப்ல முறைச்சா. தலையைக் குனிஞ்சுக்கிட்டு " இந்தா.. எனக்கு கொழுக்கட்டை செஞ்சு குடு" ன்னான்  .

No comments:

Post a Comment