Thursday, April 11, 2013

ஜ்யோதி

ஜ்யோதி

2136, மார்ச் 23 , காலை 7.30 மணி :

கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இரவு நன்றாகத் தூங்கியும் ஒரே தலை சுற்றலாக இருந்தது. " ச்சே ! காலையிலேயே இப்படிப் படுத்தறதே ?" சலிப்பாக இருந்தது பாரதிக்கு. மார்னிங் சிக்னஸ். சில மாதங்களாகவே இப்படித்தான்.அடிக்கடி தலைசுற்றல். சில அடிகள் நடந்தாலே மூச்சு இறைக்கிறது. எதைத் தின்றாலும் குமட்டல். ஆனால் படுத்தல் எல்லாம் உடம்புக்குத் தான். மனதுக்கு வெறும் சந்தோஷம் மட்டும் தான். ஒன்பது மாதங்களுக்கு முன்னால் டாக்டர் முன் அமர்ந்திருந்த அந்த கணங்கள் மனதுக்குள் ஓடின. " எடுத்துக்கிட்ட ட்ரீட்மென்ட் வீண் போகல. கன்பர்ம் ஆயிடுச்சு". இந்த வார்த்தைகளுக்குத் தானே இத்தனை வருடத் தவம். சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது பாரதிக்கு. பக்கத்தில் அமர்ந்திருந்த ரமணிக்கு பேசவே நா எழவில்லை. அந்த வார்த்தைகள் காதுக்குள் வட்டமிட்ட படியே இருந்தன. அதற்குப் பிறகு டாக்டரின் வழக்கமான அட்வைஸ்கள். கிளம்பும் போது " ரமணி ! இவங்கள நீங்க தான் ஜாக்கிரதையா பார்த்துக்கணும்." என்று புன்னகைத்தாள்.
இருவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடினர். சும்மாவா...ஐந்து வருடத் தவம். எத்தனை விசாரிப்புகள், அவமானங்கள், கிண்டல்கள் ....எதில் மாறினாலும் நம்ம ஜனங்கள் இதில் மட்டும் மாறவே மாட்டார்கள்.எல்லாவற்றுக்கும் தீர்வாய் அந்த தேவதை உருவாகி விட்டது. அன்றிலிருந்து பாரதியை தரையில் கால் வைக்க விடாமல் ரமணி தாங்கியதென்ன , எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததென்ன! நினைக்கும் போதே சிலிர்த்தது பாரதிக்கு.
இருவரும் சேர்ந்து குழந்தைக்குப் பேர் தேடியது வைபவம் தான். ஊரில் உள்ள எல்லாப் பெயர்களையும் துவைத்துக் காயப் போட்டு அலசி ஆராய்ந்தாலும் கடைசியில் அவர்கள் தேர்ந்தெடுத்தது "ஜ்யோதி". பையனாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி.

2136, மார்ச் 23, காலை 9 மணி :

"பாரதி....!" ரமணியின் குரல். ரமணி ஆபீஸ் கிளம்பியாயிற்று. அதுதான் குரல். வழக்கமான வார்த்தைகள். " பாரதி ! ஜாக்ரதையா இரு.. எந்த வெயிட்டையும் தூக்காதே... வேகமா நடக்காதே...கதவைத் தாள் போட்டுக்கோ ! " ரமணி சொல்லிக் கொண்டே போக பாரதிக்கு சிரிப்பு வந்தது. " எனக்காகவா இதெல்லாம்? ம் ஹீம் ... எல்லாம் அந்த ஜ்யோதிக்காகத் தான். !" இருந்தாலும் சந்தோஷமாயிருந்தது. நாளையிலிருந்து ரமணி ஆபீசுக்கு லீவ். பாரதியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வதற்காம். மீண்டும் சிரிப்பாக வந்தது. கூடவே அடி வயிற்றில் சுருக்கென அந்த வலியும்..........

தொடரும்...


No comments:

Post a Comment