Thursday, April 11, 2013

ஜ்யோதி - பார்ட் 2


2136 மார்ச் 23 காலை 9.15 மணி :

அந்த சுருக் இதோடு நான்கைந்து முறைகள் வந்து நின்று விட்டது. அடுத்து வந்தது நிற்காமல் அடம்பிடித்தது. இது அது தான். ரமணிக்குத் தகவல் சொல்ல வேண்டும்.மெல்ல மேஜையை அடைந்து போனை எடுத்து ஒற்றி தகவல் சொல்லி முடிக்கும் போது வலி சம்மணமிட்டு அடிவயிற்றில் அமர்ந்திருந்தது .ரமணி பதறிப் போய் வீடு வந்து சேர்ந்து , பாரதியை தூக்கிக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்வதற்குள் உயிர் போய் வந்து விட்டது..

2136 மார்ச் 23 காலை 10.30 மணி :

மனம் முழுக்கப் பதற்றம். டாக்டர் லேபர் வார்டிலிருந்து வெளியே வருவதைப் பார்த்ததும் இதயத் துடிப்பு எகிறியது. "கங்கிராட்ஸ் ரமணி... உங்க மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.எவ்ரிதிங் நார்மல். ரெண்டு பேருமே நலம். நீங்க ரெண்டு பேரும் நினைச்ச படியே எல்லாம் நடந்திருக்கு" புன்னகைத்தபடி கண் சிமிட்டினாள் டாக்டர். ரமணியின் கண்கள் நிறைந்தன. டாக்டரின் கையைப் பற்றிக் கொண்டு "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்" என்று உருகினான். "இட்ஸ் ஒகே. " என்று மீண்டும் புன்னகைத்தாள். நீங்க உள்ள போய் உங்க மனைவியையும் குழந்தையையும் பார்க்கலாம்." என்றாள் .

வேகமாக உள்ளே ஓடினான் ரமணி. கட்டிலில் கண் மூடி பாரதி. அருகில் சிணுங்கிக் கொண்டு அழகே உருவான தேவதையாய் ஜ்யோதி. அருகில் சென்று ஆசை தீர அவளை பார்த்தான். அவன் முடிவு செய்தது போலவே கண்கள் , நாசி, நிறம் எல்லாம். பார்க்கப் பார்க்கப் பரவசம் பீறிட்டது . இவன் பார்த்துக் கொண்டே இருக்கையில் மெல்ல கண்களைப் பிரித்தாள் ஜ்யோதி.

ரமணியைப் பார்த்ததும் பொக்கை வாய் மலர்ந்து தன் ரோஜாப் பூக் கைகளை நீட்டியபடி மென் மழலையில் "டாடி" என்றாள்......

No comments:

Post a Comment