Thursday, April 11, 2013

எம் மக்கள் .....


அந்த மெனு கார்ட் அற்புதமாக அச்சடிக்கப் பட்டிருந்தது. வழு வழு பக்கங்களில் கட்டளைக்குக் காத்திருந்த பதார்த்தங்கள் வெல்வெட் அட்டை கொண்டு மூடப் பட்டிருந்தன. பதார்த்தங்களின் அருகே அதனதன் விலைகள். அவற்றின் பெயர்களின் கீழே சுருக்கமாக அவற்றின் செய் முறை. செய் முறையின் கடினத் தன்மைக்கேற்ப பண்டத்தின் விலையும்.

மெனு கார்ட் வைக்கப் பட்டிருந்த மேஜையின் ஒரு புறம் சுஜா . மறுபுறம் அந்த கார்டின் ரெட்டைத் தம்பி பிரபு கையில். "ஆர்டர் பண்ணு பிரபு..." என்றாள் சுஜா. சிரிப்பு நிற்காமல் ஓவர்ப்ளோ ஆகிக் கொண்டே இருந்தது.பிரபு தலையை ஆட்டியபடி மெனு கார்டில் ஆழ்ந்திருந்தான். அவன் பார்வை மேயும் இடத்தைக் கண்ட சுஜா முகம் மாறினாள்."பிரபு..." என்று காட்டமாக அழைத்தாள். நிமிர்ந்தான்.

" ஏன் இப்டி பண்ற ...இந்த பழக்கத்தை மாத்தவே மாட்டியா...எனக்கு ப்ரொமோஷன் கெடச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதைக் கொண்டாட ட்ரீட் கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தா நீ என்னடான்னா ஒவ்வொண்ணா விலையைப் பாத்துக்கிட்டு இருக்க..ச்சே...கல்யாணத்துக்கு முன்னால இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்க." என்று சலித்துக் கொண்டாள். அவள் சூடாவதை உணர்ந்த பிரபு சூழ்நிலையை சகஜமாக்க " சாரிடா... நீயே ஆர்டர் பண்ணு...." என்று புன்னகைத்தான். அவன் புன்னகையில் இரங்கிய சுஜா வெயிட்டரை அழைத்தாள்.
அவள் மென்பொருள் நிபுணி . அவன் சி.ஏ . சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து படித்து மேலே வந்தவர்கள். இன்னும் ஓரிரண்டு அப்ரைசல்கள் பார்த்தால் ஆறிலக்கச் சம்பளம் வாங்கக் கூடிய , வெகு சீக்கிரத்தில் செடான் எனப்படும் சொகுசுக் காருக்கு சொந்தக்காரர்கள் ஆக முயற்சி செய்து வரும் ,கனவுகளைத் துரத்தும், அப்பர் மிடில் கிளாஸ் என்னும் உயர் நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்ச நிலையை நோக்கி நித்தம் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தம்பதி.
இருவரும் வெகு நிதானமாக ரசித்து ருசித்து டின்னரை முடித்தனர். பில் வந்தது. இரண்டு ஆயிர ரூபாய் நோட்டுக்களை பில் அட்டையில் செருகி விட்டுவிட்டு வெளியே வந்தனர்.ஒன்பதரை மணி. சுற்றுப் புறம் ஓய்ந்திருந்தது. பைக்கை எடுக்கப் போனவர்களின் அருகில் எங்கிருந்தோ வந்தாள் அந்த சிறுமி. அக்கா... பூ வாங்கிக்கோங்கக்கா...முழம் பத்து ரூவா தான்கா..." என்றாள்."வேண்டாம்மா " என்று தவிர்த்தாள் சுஜா. "அந்த பெண் முகம் சட்டென்று வடிந்தது. பிரபுவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "அக்கா மூணு முழம் தான் இருக்குக்கா ... வாங்கிக்கிட்டா வீட்டுக்கு போய்டுவேன்கா ...அண்ணா சொல்லுங்கண்ணா " என்றாள் இருவரையும் பார்த்து. "வாங்கிக்கோயேன் சுஜா" என்றான் பிரபு.அந்தப் பெண் வைத்திருந்த கூடையைப் பார்த்தாள் சுஜா. பூ பிரஷ்ஷாகவே இருந்தது. "வாங்கினால் என்ன?"..சரி என்பது போல் தலையை அசைத்தாள்.

பாக்கெட்டிலிருந்து காசை எடுக்கப் போன பிரபுவைத் தடுத்தாள். "மூணு முழமும் சேர்த்து இருபது ரூபான்னு குடு. வாங்கிக்கிறேன் " என்றாள் அந்தப் பெண்ணிடம். அந்தப் பெண் பரிதாபமாக பிரபுவை உதவி கோருவதைப் போல் பார்த்தாள். பயனில்லை என்று தெரிந்ததும் சுஜாவிடம் திரும்பினாள். "அக்கா... முழம் பத்து ரூவாக்கா... இருவது ரூவாக்கு மூணு முழம் கட்டாதுக்கா..." என்றாள் கெஞ்சும் தொனியில். முகத்தை மேலும் இறுக்கிக் கொண்டாள் சுஜா. "குடுத்தாக் குடு ...இல்லன்னா வேண்டாம். பிரபு... வண்டிய எடு..." என்று அவசரப்படுத்தினாள்.பிரபு கையைப் பிசைந்தான். அந்தப் பெண்ணும். "அக்கா...." என்று ஈனசுரத்தில் மீண்டும் முனகினாள் அந்தப் பெண். " அட... வேண்டாம்மா ...நீ ரொம்ப கறாரா விலை சொல்ற. எனக்கு கட்டுபடியாகாது. பிரபு ..வண்டியெடுன்னு சொன்னேன்ல.." என்று பொறிந்தாள் சுஜா. சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற சிறுமி மென்குரலில் " சரிக்கா... குடுங்கக்கா...." என்றாள். சுஜாவிடம் வெற்றிப் பெருமிதம். பிரபு பாக்கெட்டிலிருந்து ரூபாய் நோட்டுக்களை சுஜாவிடம் தந்தான்.அதிலிருந்து இரண்டு பழைய பத்து ரூபாய்களாகப் பார்த்து எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள்.பூவை வாங்கிக் கொண்டாள்.அந்தப் பெண் நோட்டுகளைத் திருப்பித் திருப்பி பார்த்தபடியே கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்தது.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் பிரபு. சுஜா ஏறி அமர்ந்தாள். சந்திரமுகி ரஜினி போல் அவள் முகத்தில் எதையோ சாதித்து விட்ட திருப்தி.கிளம்பும் முன் பிரபு ஒரு முறை திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் போய் விட்டிருந்தாள் .

No comments:

Post a Comment