Saturday, June 15, 2013

டிரெக்கிங் டைரி - தடியண்டமோள் - 1



ரொம்ப நாளாக ட்ரெக் போக வேண்டும் என்று ஆபீசில் பக்கத்து Cubicle ல் உட்கார்ந்து கொண்டு பேசிப் பேசியே என் மனதில் ஏற்றி விட்டு விட்டான் Parthiban Ramar (எ) பார்த்தி . உசுப்பேற்றி விட்டால் நாம் சும்மா இருப்போமா ? அந்தப் பக்கமாக பாஸ் போகும் வரும் போதும் எங்களைப் பார்த்து முறைக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் ஸ்தலங்களைப் பற்றி ரிசர்ச். விக்கிபீடியா எங்களைப் பார்த்து " டேய் போதும் டா ...என்னை விட்டுடுங்கடா .." என்று கதறாதது தான் பாக்கி.

தேடித் தேடி இறுதியாக குடகு மலையிலிருக்கும் "தடியண்டமோள் " மலையைப் பிடித்தோம்.விக்கிபீடியா பெருமூச்சு விட்டது. இங்கே தடியண்டமோளைப் பற்றி சில வார்த்தைகள். (ஜியாகரபியாக்கும்) .கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் இருக்கும் உயரமான மலை. கர்நாடகாவிலேயே மூன்றாவது உயரமான சிகரம். 1748 மீட்டர் உயரம். (சரி . ஜியாகரபி போதும்). இப்படியான பெருமைகள் நிறைந்த அந்த மலையை ஏறிப் பார்ப்பதென்றூற் முடிவு செய்யப்பட்டது. (இன்னும் உயரமான மலைகளெல்லாம் எங்கள் பரிசீலனையில் வந்தாலும் முதல் தடவையிலேயே நாக்கு தள்ளி டிரெக்கிங் கனவுக்கு குழி வெட்டியது போலாகி விடக் கூடாதென்று ஜாக்கிரதையாக இந்த மலையை தேர்வு செய்து விட்டோம்)

அடுத்து ஆள் சேர்க்கும் படலம். முதலில் Nirmal Sundarrajan. விஷயத்தை சொன்னவுடன் மன்மோகன் சிங் போல் கன்னம் சொறிந்து வெகு நேரம் யோசித்து "ஒ கே டா" என்றான். அடுத்து மௌன சாமியார் Rakesh Kumar.அவனிடம் கேட்கவெல்லாம் இல்லை. "டேய்...உனக்கும் சேர்த்து டிக்கட் போடறோம்.வந்து சேரு .." அவ்வளவு தான். அடுத்து அகோரி சாமியார் Keerthi Raj . "சார்...நீங்க வரீங்களா ?" என்றதும் வாயிலிருந்து வார்த்தை உதிர்க்காமல் தலையை மட்டும் பெரிதாக ஆட்டினார். சாமியின் அருள் கிடைத்ததும் அடுத்து Saravana Sagadevan. "போலாம் மச்சி." என்றான் உற்சாகமாக. எங்களுக்குத் தான் பென்சிலால் கோடு போட்டாற் போலிருக்கும் அவன் உடல்வாகை நினைத்துக் கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆள் பற்றாக்குறை அந்தக் கவலையையும் மூடி மறைத்து விட்டது.

ஆறு பேர் என்று முடிவானவுடன் பார்த்தி பர பரவென்று டிக்கட் ரிசர்வ் செய்து விட்டான். யாரோ நண்பனின் நண்பனின் நண்பனைப் பிடித்து பெங்களூரில் சேத்தன் என்றொரு டிரைவரைப் பிடித்தான். வண்டி புக் பண்ணி விட்டான்.சனி ஞாயிறில் தப்பித் தவறிக் கூட ஆபீசிலிருந்து போன் எதுவும் வந்து விடாமலிருக்க எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தாயிற்று. அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது. எல்லாரும் சென்ட்ரலில் ஒன்று கூடினோம்.ஆர்வம், லேசான பரபரப்பு, மிக லேசான அடி வயிற்றுக் கலக்கல் ( பயத்தில் தான்) என்று எங்கள் முதல் டிரெக்கிங் பயணம் அந்த வெள்ளிக் கிழமை இரவு பெங்களூர் போகும் ரயிலில் எதிர்பார்ப்புடன் துவங்கியது.

- தொடரும்

பேட்ரோல் போலீஸ்


இடப் பக்கம் பார்த்தான். வலப் பக்கம் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை பெருமூச்செறிந்து நடக்கத் தொடங்கினான் ராக்கி . ராதா கிருஷ்ணன். அந்த ஆபீசில் சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகிறது. அடுத்த நாள் சாயந்திரம் வீக் எண்டுக்கு ஊருக்கு போகப் போவதால் அன்றே முக்கிய வேலைகளை முடித்து விடத் திட்டம் போட்டு வேலை செய்தவன் இவ்வளவு லேட்டாகும் என்று நினைக்கவில்லை. சரி பத்து நிமிட நடையில் தானே ரூம் இருக்கிறது என்று நினைத்ததால் அது அவனுக்குப பெரிய விஷயமாகவும் தோன்றவில்லை. இப்போது தோன்றியது . "ஒழுங்கா ஒம்போது மணிக்கே கிளம்பியிருக்கலாம்". ஒன்பது மணியென்றதும் அம்மாவிடம் போனில் கடுகடுத்தது ஞாபகம் வந்தது. " சாப்டியாப்பா?"
"ஆச்சும்மா".
" எப்ப கிளம்புவ?"
"தெரியலம்மா.. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு".
"ரொம்ப லேட் ஆயிடுச்சேப்பா..."
(சிடுசிடுப்புடன்) " என்னம்மா பண்ண சொல்ற... நாளைக்கு ஊருக்கு வரணுமா வேணாமா ...அப்டின்னா இதெல்லாம் பண்ணி தான் ஆகணும் "....
" சரிப்பா ...பார்த்துப் போப்பா.."
" ஏம்மா கடுப்பேத்தற...நான் என்ன சின்னக் குழந்தையா..வைம்மா போனை"
இருந்தாலும் அவ்வளவு கடித்திருக்க வேண்டாம் அம்மாவை.
சுற்றிலும் அமைதி ஊரையே இழுத்துப் போர்த்தியிருந்தது . அவன் ஷூ சத்தம் அவனுக்கே " படீர் படீர்" என்று பிரம்மாண்டமாகக் கேட்டது . அதீத அமைதி முதுகுத் தண்டில் என்னவோ செய்தது .யோசனையோடே நடந்து கொண்டிருந்தவனை பிரேக் போட்டாற்போல் நிற்க வைத்தது அந்த "ஹலோ"......
இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அவன் இந்த ஊருக்கு வந்து சில நாட்களில் அலுவலகம் செல்லும் போதும் வரும் போதும் துளிக் கூட அவன் கவனத்தை ஈர்க்காத அந்த மெயின் ரோட்டிலிருந்து பிரியும் இடப் புறத் தெருவில் ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது. அங்கிருந்த கான்ஸ்டபிள் தான். மீண்டும் அழைத்தார்."ஹலோ ...இங்க வாங்க". சென்றான்.
ஜீப்பில் வயர்லஸ் மெலிதாகக் கரகரத்துக் கொண்டிருந்தது. உள்ளே இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார் .கான்ஸ்டபிள் பேட்ஜை பார்த்தான். முத்துசாமி. முத்துசாமி கேட்டார்.
"யார் சார் நீங்க ? இந்நேரத்துல எங்க போறீங்க"
இல்ல சார் .. ஆபீஸ்லருந்து கிளம்ப லேட்டாயிட்டுது.என் ரூம் இங்க பக்கத்துல தான். அதான் நடந்து போயிட்டிருந்தேன் "
இன்ஸ்பெக்டர் இப்போது கீழே இறங்கி வந்திருந்தார் . அவர் கேட்டார்.
"ஐ டி கார்டு இருக்குதுங்களா?"
காண்பித்தான் .
" ஊருக்கு புதுசா சார்?"
"ஆமா..."
"இந்த ஏரியா ரொம்ப மோசம். இப்படி இனிமே தனியா வர வேண்டாம்.இவ்ளோ நேரமெல்லாம் ஆபீஸ்ல இருக்காதீங்க புரியுதுங்களா?"
"சரி சார்"
"இப்ப நீங்க தனியா போக வேணாம். வாங்க ஜீப்ல ஏறுங்க . டிராப் பண்ணிடறேன் "
"ஐயோ இல்ல சார். என் ரூம் ரொம்ப பக்கம் தான். ஜீப்பெல்லாம் வேணாம்."
யோசித்தார் "சரி. அப்டின்னா ஒண்ணு பண்ணலாம். யோவ் முத்துசாமி ..சார் கூட அவர் ரூம் வரைக்கும் போயிட்டு வந்துடு நான் இங்கேயே இருக்கேன் " என்றார்
" சரி சார்" என்றவர் அவன் பக்கம் திரும்பினார் "வாங்க போலாம்". கிளம்பும் முன் இன்ஸ்பெக்டரின் பேட்ஜை பார்த்தான். முரளிதரன் என்றது
ரூம் அருகில் போய் சேரும் வரை அந்த ஏரியா எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் தங்கள் பேட்ரோல் ரவுண்ட்ஸ் பற்றியும் பேசிக் கொண்டே வந்தார் முத்துசாமி.ரூம் வந்து விட்டது . நின்றான். "சார் ...ரொம்ப தேங்க்ஸ் ...ரூம் வந்துடுச்சு அதோ அதுதான்" என்று முதல் மாடியைக் காட்டினான் . "சரி சார் ... இனிமே ரொம்ப லேட்டால்லாம் வராதீங்க" என்று நூற்றுப் பத்தாவது முறையாகக் கூறி விட்டு சென்றார் . அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டு முகம் கை கால் கழுவி உடை மாற்றி படுக்கையில் விழுந்தான். என்னவோ நிம்மதியாயிருந்தது இந்த ஏரியா அவ்வளவு மோசமில்லை. நல்ல போலீசெல்லாம் இருக்கிறார்கள் .. தூங்கிப் போனான்.
மறுநாள் காலை சற்றே தாமதமாக அலுவலகம் கிளம்பினான் .அந்த திருப்பத்தைக் கடக்கும் போது தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தான். பகீரென்றது . முதல் நாளிரவு அவன் பார்த்த ஜீப் முற்றிலும் சிதைந்து எலும்புக்கூடாக நின்றிருந்தது. அவனுக்கு குபீரென்று வியர்த்து விட்டது. என்னவோ செய்தது உடனே அந்த இடத்தை விட்டு அகன்றான். அலுவலகத்தில் ஏழாம் பேஸ்து அடித்தாற்போல் அமர்ந்திருந்தவனை உலுக்கினான் பக்கத்து இருக்கைக்காரன் மணி. " பாஸ் ..என்னாச்சு உங்களுக்கு ? காலையில இருந்து ஒரு மாதிரி இருக்கீங்க ?" என்றான் . சட்டென சுதாரித்தவன்,புன்னகைத்தான் "அதெல்லாம் ஒண்ணுமில்ல..."என்றவன் கேட்டான். " ஆமா...உங்ககிட்ட ஒன்ணு கேக்கணும்னு நெனச்சேன். நம்ம ஆபீஸ் வர்ற வழியில ஒரு ஜீப் புல்லா டேமேஜ் ஆகிக் கிடக்கே..அது..." என்று இழுத்தான்.
சட்டென்று மணியின் முகம் மாறியது " நீங்க இன்னிக்கு தான் அதைப் பார்க்கிறீங்களா ....இந்த ஊர்ல அது ரொம்ப பேமஸ் கேஸாச்சே ... நீங்க பேப்பர்ல படிக்கலியா?" என்றான்.
"இல்ல...என்னன்னு சொல்லுங்க "...என்றான் லேசாகத் திணறியபடி
"போன வருஷம் இங்க இருந்த ஒரு சுந்தர்ங்கிற லோக்கல் ரவுடிக்கும் ஏரியா இன்ஸ்பெக்டருக்கும் பிரச்சினை ஆயிடுச்சு. அதுல நைட்டோட நைட்டா ஆளுங்களோட போய் பேட்ரோலுக்காக அங்க நின்னுட்டு இருந்த முரளிங்கற இன்ஸ்பெக்டரையும் முத்துசாமிங்கற கான்ஸ்டபிளையும் ஜீப்போட கட்டி வெச்சு எரிச்சுட்டான். அடுத்த மூணாவது நாளே சுந்தரும் ஹைவேஸ் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான்" என்று மானிட்டரைப் பார்த்த படியே கதை சொன்னவன் "ஆமா..திடீர்னு ஏன் இதைப் பத்திக் கேக்கறீங்க ?" என்றபடியே திரும்பினான் . ராக்கியைக் காணவில்லை கீழே பார்த்தான். " இவ்வளவு சுருக்காவா மயக்கம் வரும்?"..." ஏய் ...யாரவது தண்ணி கொண்டாங்கப்பா சீக்கிரம் ".......